முகப்பு

தமிழின் சிறப்பு- சிறவர் பேச்சு

வரலாற்றுக்கு எட்டா தொன்மையானது தமிழ், பாற்கடல் அமிர்தமென பொங்கிநிற்கும் பெருஞ்சிறப்பு அதன் சிறப்பு. கடல்மறைய திரள் சிறப்பின் சிறுதுளியை ருசிபார்க்க வந்திருக்கும் சிறியேனின் வணக்கங்கள்.

இவ்வுலகில் கிட்டத்தட்ட எண்ணாயிரம் மொழிகளாம். இருந்தாலும் ஆறு மொழிகளே தொன்மையும் சிறப்பும் வாய்ந்தவை என்று மொழியியலாளர்கள் கூறுகின்றனர். ஆனால் இவற்றிலும் பல வழக்கொழிந்து போயிற்று. 

உலகில் பல மொழிகள் பேச்சுவழக்கோடு தோன்றி மறைந்து போயிற்று. சில மொழிகள் எழுத்து வழக்கில் மாத்திரம் இன்னமும் உயிர்வாழ்கின்றது. ஆனால் நம் தாய் மொழியான தமிழ் மொழி மட்டுமே காலங்கள் கடந்தும், எழுத்து வழக்கிலும் பேச்சு வழக்கிலும் இளமையுடனும், தெளிவுடனும், பொலிவுடனும் பல்லாண்டு வாழும் பரம்பொருளாய் நிலைத்து நிற்கின்றது.

சீரிளமை பொருந்திய எம் செந்தமிழ் தொன்மை எளிமை இனிமை வளமை நுண்மை செழுமை என்று பல பெருமைகளுடன் தனித்தன்மை வாய்ந்ததாக பூவுலகில் தலைநிமிர்ந்து நிற்கிறது.

கடல்வந்து பிரிக்காத ஈழம்சேர் அகண்ட பாரதமே தமிழின் பிறப்பிடம். உலகாளும் ஈசனில் உருவான முருகனே தமிழ்க்கடவுள். இறைவனே காத்து நிற்பதால் தமிழை இறைமொழி என்றும், இறைவழி பற்றிய அகத்தியரும், அவர் வழி பற்றிய தொல்காப்பியரும் இலக்கண வேலியிட்டு அழகுபடுத்தியதால் அருள் மொழி என்றும் புகழுரைப்பர் சான்றோர். 

தமிழுக்கு மட்டுமல்லாது தமிழரின் வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்தவர் தொல்காப்பியர். உளவியல் உயிரியல் தொடங்கி உலகியல்வரை வகுத்தவர் தொல்காப்பியர். இன்றுவரை பல இனங்கள் தம் மொழிகளை இலக்கணப்படுத்த முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்க, பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே இலக்கண இலக்கிய வரங்களைப் பெற்றவர்கள் நாங்கள்.

இதற்காகவே ஒவ்வொரு தமிழர்களும் பெருமிதம் கொள்ளலாம். ஐயாயிரம் ஆண்டுகள் கடந்த அப்பழுக்கற்ற ஒரு நூல் தமிழர்க்கன்றி உலகில் எவருக்குண்டு?

கணித அடிப்படையில் ஒலிக்கும் எழுத்துக்கும் நெடுங்கணக்கு அமைத்தவர்கள் எம் முன்னோர்கள். மூச்சு முட்டாமல், தொக்கி நிற்காமல் , இடையூறு இல்லாமல் இயல்பாகவும் இனிமையாகவும் பெருமுயற்சியின்றி உச்சரிக்கக்கூடிய பெருஞ்சிறப்பும் தமிழையும், தமிழின் அத்தனை சொற்களையுமே சாரும்.

வாழும் நிலத்தை ஐந்தாகவும், வீசும் காற்றை நான்காகவும், இயல் இசை நாடகம் என்று முத்தமிழ் என்று மூன்றாகவும் பிரித்துக் தமிழைக் கொண்டாடியவன், காலங்கள் தோறும் சங்கங்கள் அமைத்து தமிழ் மொழியையும் அதன் சிறப்பையும் போற்றினான்.

சேர சோழ பாண்டிய மன்னர்கள் போற்றி வளர்த்த தமிழ், அகம் புறம் என்றும் இதிகாசங்கள் புராணங்கள் என்றும் இன்றும் வாழ்கின்றது. இந்திய மொழிகளிலேயே முதன்முதலில் அச்சிடப்பட்ட மொழி தமிழே. உலகிலுள்ள அத்தனை மொழிகளுக்கும் தாயாய் தயையாய் விளங்குகிறது தமிழ். உலகின் பல மொழிகளுக்கு வேர்ச்சொற்களை கொடுத்தும், உலகின் நவீன மொழிகள் அனைத்திற்கும் எழுத்துருக்களை கொடுத்ததும் தமிழின் பெருஞ்சிறப்பாகும்.

உலகின் அன்றைய மனிதர்கள் ஒவ்வொரு பொருளையும் ஒவ்வொரு குறியீடு கொண்டு குறிக்க முனைந்தார்கள். அக்காலத்திலேயே, ஒலிப்பு முறை ஒவ்வொன்றுக்கும் உருவம் கொடுத்து ஒலிப்புக்கு எழுத்துரு என்ற உன்னத நிலையை பெற்றவர்கள் தமிழர்கள். இன்றைய நிலையில் தமிழ் எழுத்துக்கள் பிராமி எனப்படும் தமிழியில் இருந்து கதம்பம் வட்டெழுத்து நாகரி லத்தீன் என்று பல வடிவங்களில் மாறி நின்றாலும், ஒலிப்புக்கு எழுத்துரு என்ற உலகின் இன்றைய அனைத்து மொழிகளுக்கும் தமிழ் எழுத்துக்களே அடிப்படையாகும்.

அன்னியர் பலர் படையெடுத்து நின்றபோதும், ஆட்சி அதிகாரமின்றி அல்லலுற்ற போதும் தமிழ் தன்னிருப்பை இழந்ததில்லை. தமிழையே தாயாக கோயில் அமைத்து கோபுரத்தில் இருத்தினான் தமிழன். இத்தனை பெருஞ்சிறப்பும் தமிழுக்கன்றி வேறோர் மொழிக்கு ஒருபோதும் கிடைத்ததில்லை. இப்படி தமிழின் பெருமையையும், அதன் சிறப்பையும் நாள்முழுவதும் சொல்லிக்கொண்டே போகலாம். 

இப்படி பழம்பெருமை பேசுவது மட்டுமே தமிழர் நம் பெருமையல்ல. பார்புகழ் நம் தமிழை ஞாலம் உள்ளவரை நிலைத்திருக்கச் செய்வதே எம் பிறவிக்கடனும், உண்மையான பெருமையுமாகும்.



Ourhome Div Pictures, Images and Photos

0 கருத்துகள்: